பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்த பாகிஸ்தான், தவறான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி, உலக அளவில் இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்க முயற்சி செய்துள்ளது.

குறிப்பாக, ஒரு ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் வீடியோ, நான்கு ஆண்டுகளுக்கு முந்தையது என்பது  தெரியவந்தது. இந்த தவறான தகவல்களை இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) நிராகரித்துள்ளது.

அனைத்து இந்திய விமானங்களும், விமானிகளும் பாதுகாப்பாக தங்கள் முகாமிற்கு திரும்பியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவும் தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகக் கண்டனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் தாக்குதலில் பயங்கரவாத இயக்கங்களின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் இந்த தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படை 25 நிமிடங்களுக்கு மேலாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு பின்னணியாக இருந்தது, ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல். இதில் 26 பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசு ஆவேசத்தோடு செயல்பட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு துல்லியமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது தடுமாற்றங்களை மறைக்க பொய்யான தகவல்களைக் கொண்டு உலகை ஏமாற்ற முயற்சிக்கிறது என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.