சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு கணக்கு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவர்கள் எழுதியிருக்கின்றனர்.

இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் கண்டறிதல் தேர்வு கூட நுழைவு சீட்டு தயாரிப்பு மற்றும் பெயர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தேர்வு துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வருகிற ஜனவரி 30 -ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகளின் நிலை தொடர்பாக தேர்வு துறை சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் துறை சார்ந்த இயக்குனர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தில் வினாத்தாள், விடைத்தாள் மாவட்ட அலுவலகங்களில் இருந்து கட்டு காப்பு மையங்களுக்கு இடமாற்றம் அரை கண்காணிப்பாளர் உட்பட தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தேர்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் செய்முறை தேர்வு வினாத்தாள் மையங்களில் காவல் பாதுகாப்பு போன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பள்ளி கல்வித்துறையின் அலுவலக ஆய்வு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆணையர் க.நந்தகுமார், துறை சார்ந்த இயக்குனர்கள், செயலாளர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் இடை நின்ற மாணவர்களின் கணக்கெடுப்பு நிதி செலவினங்கள் நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.