தமிழகம் முழுவதும் என்று பொங்கல் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை சாதி, மதம், பேதம் இன்றி பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து காவல்துறையினரோடு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது திமுக கட்சியின் தலைவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைத்து தொண்டர்களை சந்திப்பது வழக்கம்.

இது கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. கலைஞர் பொங்கல் பண்டிகையின் போது தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 100 வழங்குவார். இதேபோன்று தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைத்து பொங்கல் பண்டிகையின் போது தொண்டர்களை சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது தொண்டர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த தொண்டர்கள் அனைவருக்கும் ரூ. 100 பரிசாக கொடுத்தார். மேலும் இந்த பணத்தை தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாங்கிய நிலையில் பணத்தை பலரும் செலவு செய்யாமல் தலைவர் கொடுத்த பணம் என்பதால் அதை பத்திரமாக வைத்துக் கொள்வதோடு சிலர் வீட்டில் பிரேம் செய்து மாட்டிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.