கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் மணலோடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23), அவரது மனைவி அம்ருதா (18) ஆகியோர் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் சில குடும்பப் பிரச்சினைகள் உருவாகி, அம்ருதாவின் குடும்பத்தினருக்கும் ராஜேஷுக்கும் நல்ல உறவு இல்லையென அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனிடையே, சில நாட்களாக தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்ருதா, மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது, கணவர் ராஜேஷ் தூக்கிட்டு உயிரிழந்ததை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியடைந்த அம்ருதா, ராஜேஷின் தாயாரை அழைத்து உடலை கீழே இறக்கி சோபாவில் வைத்தனர். பின்னர், ராஜேஷின் தாய் அண்டை வீட்டாரிடம் தகவல் தெரிவிக்க வெளியே சென்றுவிட்டார். அதற்குள் மனஅழுத்தத்தில் ஆழ்ந்த அம்ருதா, அதே கயிற்றில் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக அம்ருதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலும் நிலம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமானது இரண்டு மாதங்கள் கூட ஆகாமல், புதிதாக வாழ்வைத் தொடங்கிய இளம் தம்பதியினர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
