அரபிக் கடலில் உருவாகிய பைபர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் 3-4 மணிவரை குஜராத்தின் கட்ச் பகுதியிலுள்ள ஜக்காவ் கடற்கரையை “பைபர்ஜாய்” புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதன்கிழமை மாலை வரை ஜகாவ் துறைமுகத்திலிருந்து சுமார் 260 கி.மீ வேகத்தில் பைபர்ஜாய் புயல் இருந்துள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட் அளித்த தகவலின் அடிப்படையில், அடுத்த 24 மணிநேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச், அசாம், சிக்கிம் மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும். குஜராத் கடற்கரையில் வட கிழக்கு அரபிக் கடலில் இன்று பலத்த காற்று வீசக்கூடும். கடலோர கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் கனமழையோடு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதவிர குஜராத் பகுதி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் லட்சத் தீவுகளில் லேசான மழை பெய்யக்கூடும். கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள், தமிழகம், மேற்கு வங்காளம், ஒடிசா, வடகிழக்கு பீகார் போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.