பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் “மெட்டா வெரிஃபைடு” எனப்படும் கட்டண சந்தா சேவையை அண்மையில் அறிவித்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ரூ.699 விலையில் கிடைக்கும் இந்த புது சேவையானது அரசாங்க அடையாள சான்றினைப் பயன்படுத்தி கணக்குகளை அங்கீகரிக்கும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பின் பயனர்களின் சுயவிபரத்தில் நீல நிற டிக் வழங்கப்படும். இதற்கான வழிமுறைகள் குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக் (அ) இன்ஸ்டாகிராம்  இல் பயனர் சுயவிபரத்திற்கு சென்று அமைப்புகளைப் பார்வையிட வேண்டும். இதையடுத்து கணக்கு மையத்தை தேர்ந்தெடுத்து மெட்டா சரிபார்க்கப்பட்ட விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் தகுதியுடையவராக இருப்பின், உங்களது பெயரில் மெட்டா சரிபார்க்கப்பட்டதைக் காண்பீர்கள்.) தற்போது ​​நீங்கள் விரும்பும் கட்டண முறையை தேர்ந்தெடுத்து, மாதாந்திர கட்டணத்தை செலுத்தவும். பின் சரிபார்ப்பிற்காக அரசு வழங்கிய புகைப்பட ஐடியுடன் செல்ஃபி வீடியோவைப் பதிவேற்ற வேண்டும்.

உங்களது கணக்கில் சுயவிவரப் புகைப்படம், கூடுதல் விவரம் மற்றும் குறைந்தது ஒரு இடுகை இருத்தல் வேண்டும். சரிபார்ப்பு கோரிக்கையை சமர்ப்பிக்கும்போது கவனமாக இருக்கவும். பயனர் சுயவிவரத்துடன் ஐடி பொருந்தியவுடன் கணக்கு சரிபார்க்கப்பட்டதும், பயனர்கள் தங்களது சுயவிவரத்தில் பிறந்த தேதி (அ) பயனர் பெயரை மாற்ற முடியாது.

இதனிடையே கணக்கில் முந்தைய இடுகைகளின் வரலாற்றை நிரூபிக்க வேண்டும். முழு சரிபார்ப்பு செயல்முறையும் வெற்றிகரமாக முடிந்ததும் சரிபார்க்கப்பட்ட கணக்கு அதன் நம்பகத் தன்மையைக் குறிக்கும் விதமாக பேஸ்புக் (அ) இன்ஸ்டாகிராம் சுயவிவரத்திற்கு அடுத்ததாக நீல நிற டிக் (அல்லது) பேட்ஜைக் காண்பிக்கும்.