கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சண கன்னடா மாவட்டம் பணகஜே பகுதியில் முகமது ஷாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாகீல்(21) நேற்று பில்தங்குடி டவுனுக்கு சென்றார். அப்போது நவ நாகரிக முறையில் ஆடைகள் அணிந்திருந்தார். வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். நவ நாகரிக முறையில் அந்த ஜீன்ஸ் பேண்ட் அங்கங்கே கிழிந்த நிலையில் இருந்தது. அவர் மார்க்கெட்டுக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது லாயிலா கிராமத்தைச் சேர்ந்த சபீர், அனிஷ், பாப் ஜான் சாஹிப் ஆகியோர் சேர்ந்து சாகீலை வழிமறித்து இது போன்ற நவ நாகரிக ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சபீர் உள்ளிட்ட மூன்று பேரும் சாகீலை வசமாக பிடித்து வைத்துக்கொண்டு ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கி ஜீன்ஸ் பேண்ட்டை தைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சாகீல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.