
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் எஸ்.எஸ்.டி.பி என்ற ஸ்டீல் ட்யூப் பிரிவில் சண்முகம் என்பவர் பொது மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்ற சண்முகம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சண்முகத்தின் அலுவலக அறை கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த நிறுவனத்தினரும், சண்முகத்தின் குடும்பத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சண்முகம் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சண்முகம் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.