குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் ஆபத்தான ‘போலியோ’ வைரஸை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்குத் தனது கைகளால் போலியோ சொட்டு மருந்தினை ஊட்டி, இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான முகாமை அதிரடியாகத் தொடங்கி வைத்துள்ளார். இன்று நடைபெறும் இந்த மாபெரும் முகாமிற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 43,051 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாகச் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான இலக்காகத் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை மட்டுமே இந்த முகாம்கள் செயல்படும் என்பதால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அனைவரும் தங்களது அருகில் உள்ள மையங்களுக்குத் தாமதிக்காமல் அழைத்துச் சென்று, சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
