சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற வங்கி கிளைகள் (அ) தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றியும் கொள்ளலாம். இத்திட்டத்தில் முதலீட்டு காலம் 15 வருடங்கள் மற்றும் முதிர்வுகாலம் 21 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் கணக்கை குறைந்தபட்சம் ஆரம்ப வைப்புத் தொகையான ரூபாய்.250ல் துவங்கலாம்.

முதலீடு செய்வோர் ஒவ்வொரு நிதிஆண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய்.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். எனினும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் தொகையை செலுத்தவில்லை எனில், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் கணக்கு செல்லாததாக மாறி விடும். சுகன்யா ஸ்மரித்தி யோஜனா சந்தாதாரர் 7.6% வட்டி விகிதத்தை பெறுவார். இதற்கிடையில் சம்பாதித்த வட்டியானது ஒவ்வொரு நிதிஆண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வருமான வரிச்சட்டம் 1961ன் பிரிவு 80C-ன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. அதே பிரிவின் கீழ் வைப்புத்தொகைக்கும் விலக்களிக்கப்படுகிறது. நீங்கள் ரூபாய்.250-ல் கணக்கைத் தொடங்கி முதல் மாதம் ரூ.750-ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால் உங்களது மொத்த ஆண்டு வைப்புத்தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உங்களது மகள் பிறந்ததும் கணக்கைத் திறந்தீர்கள் என்று வைத்துக்கொண்டால், அவளுக்கு 21 வயதாகும்போது உங்கள் முதலீடு ரூபாய்.1,80,000 ஆக இருக்கும். அதே நேரம் ரூபாய். 3,47,445 மதிப்புள்ள வட்டியை பெறுவீர்கள். ஆகவே 21 வருடங்களுக்கு பின் முதிர்வுத் தொகையாக ரூபாய்.5,27,445 பெறுவீர்கள்.