
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ஆதார் பதிவு திட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பெற்றோர்களிடம் பணம் பறிக்க முயற்சித்து வருகிறது.
அதாவது மாணவர்களின் பெற்றோர்களுக்கு whatsapp மூலம் தொடர்பு கொண்ட நெல்லை உள்ளிட்ட சில பகுதிகளில் அவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டு பண மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அணுகி கல்வித்துறையில் இருந்து ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உடனடியாக ஊக்கத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி whatsappபில் அனுப்புகிறார்கள்.
அப்படி செய்யும் போது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள். இந்த மோசடியால் சுமார் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டு இது போன்ற ஊக்கத்தொகைக்காக பள்ளிகளில் இருந்து யாரும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்க மாட்டார்கள் என்பதை கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மோசடியில் இருந்து அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.