
தென் கொரிய நடிகை கிம் சே-ரோன் (Kim Sae-ron) சூல் நகரில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு 24 வயது ஆகிறது. கிம் சே-ரோன், 2010ம் ஆண்டு வெளியான “The Man from Nowhere” திரைப்படத்தில் கடத்தப்பட்ட குழந்தையாக நடித்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்றார். இந்தப் படத்திற்காக அவர் Korean Film Awards-ல் சிறந்த புதிய நடிகை விருதை வென்றார். மேலும், கிம் சே-ரோன் தனது திறமையால் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார்.
2022ம் ஆண்டு, மது போதையில் வாகனம் ஓட்டிய விவகாரத்திற்காக 20 மில்லியன் வொன் (சுமார் $13,800) அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் மீது மக்கள் எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தனர். இதனால் புதிய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் திரையுலகில் சிரமங்களை சந்தித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரின் வாழ்க்கை மிகவும் சிக்கலான நிலையை அடைந்தது என்று திரை உலக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிம் சே-ரோனின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.