
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வயலூருக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் நரிமேட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கட்டக்குளம் பிரிவில் சென்ற போது பின்னால் வந்த லாரி சரவணகுமார் ஒட்டிய மோட்டார் சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கவிதா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணகுமார், ஷிவானி, வைஷ்ணவி ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.