குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி, 3 மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே 12 வார மகப்பேறு விடுமுறை (Maternity Leave) வழங்கப்பட்டு வந்தது. ஆனால், “ஒரு தாய் தனது குழந்தையை எப்படிப் பெற்றெடுக்கிறாள் என்பது முக்கியமல்ல, அவற்றுக்கிடையேயான பாசப் பிணைப்புதான் முக்கியம்” என்று கூறிய நீதிபதிகள், இனி எந்த வயதுக் குழந்தையைத் தத்தெடுத்தாலும் அந்தத் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

​சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் வயதைக் காரணம் காட்டி விடுமுறையை மறுப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையைப் பறிப்பதாகும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, காப்பகங்களிலிருந்து தத்தெடுக்கப்படும் பெரிய குழந்தைகளுக்குப் புதிய சூழலில் தங்களை மாற்றிக் கொள்ளவும், பெற்றோருடன் பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் அதிக காலம் தேவைப்படும் என்பதை நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர். மேலும், தாய்மார்களுக்கு விடுமுறை அளிப்பது போலவே, தந்தையர்களுக்கும் ‘பேட்டர்னிட்டி லீவ்’ (Paternity Leave) வழங்குவது குறித்து மத்திய அரசு ஒரு முறையான கொள்கையை வகுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.