
சென்னை மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான்(35). இவர் திருவள்ளூர் தெருவிலுள்ள சாய்பாபா கோவில் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா சரண்யா மேல்நல்லாத்தூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் லட்சுமி, ரவிக்குமார் ஆகிய இருவர் சரண்யாவிடம் நாங்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் எனக் கூறி அறிமுகமாகி அவருடன் நட்பாக பழகி வந்தனர்.
பின்பு தங்களிடம் தங்கப் புதையல் உள்ளது எனவும், 10 லட்சம் கொடுத்தால் அரை கிலோ தங்கம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பிய சரண்யா அவர்களிடம் இருந்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு அருகில் இருந்த நகை கடையில் சோதனை செய்த போது அது ஒரிஜினல் என நகைக்கடைகாரர் கூறியுள்ளார்.
அதனால் சரண்யா இதுகுறித்து முகமது இர்பானிடம் கூறியுள்ளார். அதற்கு இர்பான் அவர்களை என்னிடம் வர சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறினார். அதனால் நேற்று முன்தினம் லட்சுமி , ரவிக்குமார் இருவரும் தங்களிடம் உள்ள தங்க கட்டியை முகமது இர்பானிடம் கொடுத்து பணம் கேட்டுள்ளனர்.
அப்போது அதனை வாங்கிய இர்பான் அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று சோதனை செய்து பார்த்தார். அப்போது அது போலி தங்க கட்டி என்பது தெரியவந்ததால் உடனடியாக இர்பான் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி இர்பான் லட்சுமி , ரவிக்குமார் இருவரையும் வரவழைத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். பின்பு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் இருந்த தங்கம் முலாம் பூசப்பட்ட 1/2 கிலோ பித்தளையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அக்கா,தம்பி என்பது தெரிய வந்தது.
மதுரையை சேர்ந்த மணி என்பவர் இவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து லட்சுமி , ரவிக்குமார் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மணியை போலீசார் தேடி வருகின்றனர்.