
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரகு தன்னுடைய உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது மாலை நேரத்தில் புகழேந்தி என்பவர் தன்னுடைய வளர்ப்பு நாய்களுடன் பூங்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துக் குதறியுள்ளது. இதனால் சிறுமி வலியால் அலறி துடிக்கவே அவருடைய தாயார் அங்கு ஓடியுள்ளார்.
ஆனால் தடுக்க சென்ற சிறுமியின் தாயாரையும் நாய்கள் கடித்தது. இந்த நாய்களின் உரிமையாளர் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த சிறுமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து தன்னுடைய சொந்த செலவில் சிறுமியின் சிகிச்சையை பார்த்துக் கொள்வதாக புகழேந்தி கூறியதால் அவரை அருகிலிருந்த அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதைத் தொடர்ந்து புகழேந்தி, அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.