
அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் கவின் தசார் என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆக்ராவாகும். இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற ஜூலை 29-ம் தேதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், கவின், அவரது மனைவி மற்றும் சகோதரியுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தார். பின் புதுமண தம்பதியர் பைக்கில் வீடு திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று இவர்களை மோதுவது போல் சென்றுள்ளது.
இதனால் இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதைத்தொடர்ந்து கவின் அந்த லாரியை விரட்டி சென்றுள்ளார். பின் அந்த லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் லாரி ஓட்டுநர் சிரித்துக் கொண்டே, திடீரென துப்பாக்கி எடுத்து கவினை நோக்கி மூன்று முறை சுட்டுள்ளார். இதில் கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் துப்பாக்கி மற்றும் வன்முறை அதிகரித்துள்ளது. இனவெறி தாக்குதலும் அதிகமாகி உள்ளது. மேலும் இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.