இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய ₹20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில், சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஸ்ரீ சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறும். இது அவருடைய பதவிக்காலத்தில் வெளியாகும் முதல் கரன்சி நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூ.20 நோட்டுகள் மகாத்மா காந்தி (புதிய) தொடரின் கீழ் வரவுள்ளது. இருப்பினும், புதிய கையொப்பத்தை தவிர, நோட்டின் வடிவமைப்பு, அளவு, நிறம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழக்கமாக இருக்கும் பச்சை-மஞ்சள் கலர் கொண்ட இந்த நோட்டில், பின்னணியில் எலோரா குகையின் படம் இடம்பெறும்.

முக்கியமாக, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ரூ.20 நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாக இருக்கும் எனவும், பொதுமக்கள் அதில் எந்த குழப்பமும் கொள்ள வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய வெளியீடு ஒரு வழக்கமான பணி நடைமுறையாகவே பார்க்கப்படவேண்டும் என்றும், ரொக்க பரிவர்த்தனைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் வங்கி உறுதியளித்துள்ளது.