அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26,502 உள்ளது . பகுதி நேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36,954 ஆக உள்ளது.

இதனிடையே புதிய ரேஷன் கார்டுகள் கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் புதிய அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டையில் மாற்றம், புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை www.npds.gov.in என்று இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.