சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸ் என்பவர் திருடு போன வாகனம் கிடைத்ததாக கூறி அதற்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து 5000 மட்டும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஹரிதாஸ் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அவரின் சகோதரரிடம் கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் சகோதரர் ஹரிதாஸ் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் ஹரிதாஸ் வீட்டிற்கு சென்று இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் ஹரிதாசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது ஹரிதாஸ் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. எனவே அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹரிதாசை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்.