
ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடை இருக்கிறது. இக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் உள்ளன. இந்த கடையின் பின்பகுதியில் மிகப்பெரிய குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை கடையின் ஒரு பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதற்குள் தீ மளமளவென எரிந்து அடுத்தடுத்த இடங்களில் பரவியதால் கடையின் ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. எனவே 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில் தீ அடுத்தடுத்த இடங்களுக்கு பரவி வருவதால் அருகில் உள்ள கடைகளில் இருந்து பொருள்கள் வெளியேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்தால் உருவான கரும்புகையால் அங்குள்ள மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் குடோனில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.