
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐந்தாவது முறையாக கருவுற்று இருந்த ஜெனினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரு சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு ஜெரினா சர்ச்சுக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளர் பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி பெருமாளின் மருமகன் ராமன் மாற்று சாவியை கொண்டு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டினுள் துர்நாற்றம் வீசியது. அதனால் ராமன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சுற்றி சோதனை செய்தனர்.
அப்போது வீட்டு தரையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பள்ளமாகவும் அதனை சுற்றி புழுக்களும் இருந்தது. அதனால் குழப்பம் அடைந்த போலீசார் ஜெனினாவை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெனினா கூறியதாவது, இதற்கு முன்பு பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் தானே பிரசவம் பார்த்ததாக கூறினார்.
ஐந்தாவதாக பிறந்த குழந்தைக்கும் தானே பிரசவம் பார்த்ததாகவும், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாகவும் கூறினார். அந்த சமயம் கணவர் வெளியூரில் வேலைக்கு சென்று விட்டதால் உதவிக்கு யாரும் இல்லாமல் என்ன செய்வதென்று புரியாமல் குழந்தையை வீட்டினுள் குழிதோண்டி புதைத்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து குழந்தை புதைத்த இடத்தை தோண்டிய போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெரினாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.