
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த மூன்று நாட்களை ஆன குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு மிகவும் அரிதான ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்பட்டதால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் முயற்சி செய்து பார்த்தும் அவர்களால் முடியவில்லை.
இதற்கிடையே மருத்துவரான சுதாகர் ரத்த தானம் செய்வோர் பட்டியலில் இடம் பெற்ற நபர்களை தொடர்பு கொண்டு பேசிய போது திமுக இளைஞரணி மாநில அமைப்பாளரும், முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்துக்கு ஓ நெகட்டிவ் ரத்தம் என்பது தெரியவந்தது.
அவரை தொடர்பு கொண்டு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என கூறியதால் நள்ளிரவே அவர் மருத்துவமனைக்கு சென்று ரத்தத்தை தானமாக கொடுத்தார். மேலும் குழந்தையின் உடல் நலம் குறித்து எம்எல்ஏ சம்பத் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வது அவசியம் எனவும் கூறியுள்ளார்.