சென்னையில் நேற்று முன்தினம் இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதன் பிறகு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல திடுக்கிடும் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளான நேற்று முன்தினம் ஆம்ஸ்ட்ராங்கை அவருடைய தம்பி உட்பட கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவர்கள் கொலை செய்த பிறகு ஆம்ஸ்ட்ராங் ரத்தக்கறை படிந்த பட்டாக்கத்தியை ஆற்காடு சுரேஷ் உருவப்படத்திற்கு முன்பு வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்கள் கொலை செய்த பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 5 பட்டாகத்திகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கைதானவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.