பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது தென்கிழக்கு ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியட்நாம் சென்றுள்ள நிலையில், ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த வீடியோவில், மேக்ரான் வெளியே வரும்போது, ஒரு சிவப்பு நிறக் கை அவரது முகத்தில் லேசாக அடிப்பது போல் தெரிகிறது.

சில விநாடிகளுக்குப் பிறகு, அதே நிற உடையில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் காட்சியில் தோன்றுவதால், மேக்ரானை அவருடைய மனைவியே கன்னத்தில் அறைந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம், வியட்நாமின் தலைநகர் ஹனோய் விமான நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் கதவு திறந்ததும் மேக்ரான் வெளியே வந்தார். அப்போது, மெல்ல அவரது முகத்தை தட்டுவது போல வீடியோவில் ஒரு காட்சி பதிவாகியுள்ளது.

இதனைப் பார்த்த பலரும், “மனைவி மேக்ரானை விளையாட்டாக அறைந்தாரா? சண்டை நடந்ததா?” என விமர்சனங்களும், மீம்களும் உருவாக்கி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபரின் அலுவலகம் முதலில் வீடியோவின் நம்பகத்தன்மையை மறுத்தாலும், பின்னர் அது உண்மை என்றே ஒப்புக்கொண்டது. இருப்பினும், அதில் எந்த சண்டையுமில்லை என்றும், “இது தம்பதியருக்கு இடையில் நடந்த வேடிக்கையான நடந்த சம்பவம். சண்டை எதுவும் இல்லை” என்றும் விளக்கமளித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இதைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.