நடிகர் கருணாஸின் மகனும், ‘அசுரன்’ படப்புகழ் நடிகருமான கென் கருணாஸ், தனது புதிய திரைப்படமான ‘யூத்’ (Youth) மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், தமிழ் திரையுலகில் தான் சந்தித்த சவால்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தான் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படத்தின் கதையைக் கூறியபோது, தமிழில் உள்ள முன்னணி மற்றும் இளம் நடிகைகள் பலரும் தன்னுடனும், தான் உருவாக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயங்கியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏன் உங்கள் படத்தில் மலையாள நடிகர்களை நடிக்க வைத்தீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். உண்மை என்னவென்றால், தமிழில் எந்த கதாநாயகியும் என்னுடன் நடிக்கத் தயாராக இல்லை. பல இளம் நடிகைகளிடம் பேசினேன், ஆனால் கதையை விடத் தங்கள் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்தே அவர்கள் கவலைப்பட்டனர்” என்றார்.

மலையாள நடிகர்களிடம் ஈகோ (Ego) இல்லை என்று பாராட்டிய கென், “மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் பேசும்போது, கதை பிடித்திருந்தால் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க முன்வருகிறார்கள். அவர்களுக்குக் கதையே பிரதானமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, ‘சிறை’ பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிடம் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவர் அனிஷ்மா அனில்குமாரைப் பரிந்துரைத்ததாகக் கூறினார். “அனிஷ்மாவிடம் கதையைக் கூறியபோது, அடுத்த நாளே சம்மதம் தெரிவித்தார். படத்தில் அவர் மிகச்சிறப்பாகப் பங்களித்துள்ளார்” என கென் குறிப்பிட்டார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிஷ்மா அனில்குமாருடன், சூரஜ் வெஞ்சரமூடு, மீனாட்சி தினேஷ், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதனும், அபிஷனும் எங்களுடன் நடிக்க சில நடிகைகள் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறிய போது கதை பிடிக்காததால் அப்படி அவர்கள் செய்ததாகவும் கதை நன்றாக இருந்தால் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைத்தேன் ஆனால் நான் நினைத்தது தவறு என்று கூறிய நிலையில் தன்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இன்று முட்ட கலக்கி பாடலுக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.