
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சில பட்டாசுகள் பாஜக அலுவலகத்தில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்த தொண்டர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.