இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய திரைப்படம் உருவாக உள்ளது. “மா வந்தே” என்ற பெயரிலான இப்படத்தில், முன்னணி மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குவது கிராந்தி குமார், இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிபுணர்கள் பங்களிப்பில், சர்வதேச தரத்தில் உருவாகிறது. பான் இந்தியா அளவில், அனைத்து இந்திய மொழிகளிலும், கூடுதலாக ஆங்கிலத்திலும் படம் வெளியிடப்பட உள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் தீவிர கவனம் பெற்றுள்ள உன்னி முகுந்தன், சமீபத்தில் வெளியான “மார்கோ” திரைப்படத்தில் நடித்திருந்தார். ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம், அவருக்கு பான் இந்தியா மார்க்கெட்டை உருவாக்கி வைத்தது. அதன் பின்பு வெளியான ‘கெட் செட் பேபி’ என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் “மா வந்தே” திரைப்படத்தில் நாயகனாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் உன்னி முகுந்தன் தமிழில் சீடன், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.