பாஜகவில் இணைந்த விஜயதரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்..

தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் விஜயதரணி. கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு சாதகமாக பாஜகவினர் பார்க்கின்றனர். பாஜகவில் சேர்ந்த விஜயதரணிக்கு அக்கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜயதரணியை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதரணி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி  அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு. எல்.முருகன் மற்றும் பாஜக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு. அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சகோதரி விஜயதரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.