
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக கடந்த சனிக்கிழமை குவைத் சென்றார். குவைத் அரசர் ஷேக் மிஷால் அல் அகமது விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு சென்றார். சொகுசு விடுதியில் மேளதாளங்கள் மற்றும் கதக்களி நடன நிகழ்ச்சி உடன் இந்திய வம்சாவளியினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டுக்கு நூற்றுக்கணக்கான இந்திய பணியாளர்கள் செல்கின்றனர். இந்த நிலையில் குவைத் சிட்டியில் 101வது முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை பணி அதிகாரியான மங்கள் செயின் ஹண்டாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது குவைத் நாட்டு அரசு அந்த நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது. பிரதமர் மோடிக்கு ஒரு நாடு அளிக்கும் இருபதாவது சர்வதேச கௌரவம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரசு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாளமாக அந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.