கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடும் விதமாக வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  சுரேந்திரன் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்த விபரங்கள் நேற்று வெளிவந்துள்ளது. இந்நிலையில் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருடைய பெயர் சேவியர் என்று காவல்துறையினர் கூறினர். இது தொடர்பாக கொச்சி நகர காவல் ஆணையாளர் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குற்றவாளியான சேவியர் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பகைமையால் இச்சம்பவம் நடந்துள்ளது. அவர் தன் அண்டை வீட்டுக்காரரை மாட்டிவிட வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த கடிதம் எழுதியுள்ளார். தடவியல் அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அவரை நாங்கள் கண்டறிந்தோம். கொச்சிக்கு வருகை தரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 2060 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.