ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் மெதினிநகர் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் வயிற்றில், சிறுநீரகப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்தது போன்ற கீறல் தடங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நலக் குழு மற்றும் குழந்தைகள் உதவி மையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று இரண்டு சிறுவர்களையும் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும், அங்கிருந்த மற்றொரு சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், உறவினர்களுடன் சேர்ந்து பிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பிச்சை மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியை தங்களுடன் வந்தவர்கள் பெற்றுக் கொள்வதாகவும் சிறுவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பிகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர், மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் தங்களது மகன்கள் எனக் கூறி குழந்தைகள் நலக் குழுவை அணுகியுள்ளனர். இதனால் சிறுவர்களின் அடையாளம் மற்றும் குடும்பப் பின்னணி குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் முக்கிய கேள்வியாக இருப்பது, சிறுவர்களின் வயிற்றில் காணப்படும் கீறல் தடங்கள் எதற்காக ஏற்பட்டன என்பதுதான். குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் கூறுகையில், சிறுநீரகம் அமைந்துள்ள பகுதியில் இந்தத் தடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை நோய் காரணமாக செய்யப்பட்ட மருத்துவச் சிகிச்சையினாலா அல்லது வேறு காரணத்தினாலா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஒரு சிறுவன் வயிற்றில் கட்டி இருந்ததாகவும், மற்றொருவர் கல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்றதாகவும் வெவ்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு சிறுவர்களுக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடலில் உள்ள கீறல் தடங்களுக்கான உண்மையான காரணம் என்ன, மருத்துவ ரீதியாக ஏதேனும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா, அவர்களின் உறுப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளனவா என்பதையும் மருத்துவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். உறுப்பு கடத்தல் நடந்ததாக இதுவரை எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், மருத்துவ அறிக்கை மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் நலக் குழுவினர் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.