சமூக ஊடகங்களில் சில காணொளிகள் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்து, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு ரயில் லோகோ பைலட்டின் மனிதநேய செயலை வெளிப்படுத்தும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

அந்த காணொளியில், ஒரு பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு நகரத் தொடங்கிய நிலையில், வயதான தம்பதியினர் ஏதோ காரணத்தால் ரயிலில் ஏற முடியாமல் நடைமேடையில் நின்றுள்ளனர். இதனை கவனித்த அவர்கள், தங்களால் ஏற முடியவில்லை என்பதை லோகோ பைலட்டிடம் தெரிவிக்கின்றனர். உடனே, எந்த தயக்கமும் இன்றி லோகோ பைலட் ரயிலை நிறுத்த உத்தரவிடுகிறார்.

 

வீடியோவில், ரயில் மெதுவாக நகரும் நிலையில் லோகோ பைலட் வாயிலில் நின்று, கைசைகை மூலம் ரயிலை நிறுத்தச் செய்வதும், அதனைத் தொடர்ந்து வயதான தம்பதியினர் அவசரமாக ஓடி ரயிலில் ஏறுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. லோகோ பைலட்டின் இந்த மனிதநேய செயல் பார்ப்பவர்களின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது.

இந்த 26 விநாடிகள் கொண்ட காணொளியை சமூக ஊடக தளமான X இல் @Rakeshkalotra9 என்ற கணக்கு, “இரக்கம் என்பது உண்மையான பக்தி; இரக்கம் என்பது கடவுளை அடையும் பாதை. மனிதர்களின் துயரத்தில் உடன் நிற்பவர்களிடம் கடவுள் வசிக்கிறார்” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், நூற்றுக்கணக்கான பயனர்கள் லைக் செய்து தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், “இதுதான் உண்மையான மனிதநேயம்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “விதிகள் முக்கியம்தான், ஆனால் மனிதநேயம் அதைவிட மேலானது” என்று எழுதியுள்ளார்.

மேலும் சிலர், “இது போன்ற மனிதர்களால் தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது” என்றும், “மற்றவர்களுக்கு நன்மை செய்பவர்களை கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார்” என்றும் பாராட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம், கடமையோடு சேர்ந்து மனிதநேயமும் முக்கியம் என்பதைக் காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.