பார்வை தெரியாதவர்கள் பாதையை கடக்கும் பொழுது பரிதவிப்பதை பார்த்து நாம் வருந்தி இருப்போம். இப்போது அவர்களுக்கு வழிதுணையாக வந்திருக்கிறது மற்றொரு தொழில்நுட்பம். நன்றி உணர்வு மிக்க விலங்காக பார்க்கப்படும் நாய் வடிவில் வந்திருக்கிறது பார்வையில்லாதவர்க்கு உதவும் ரோபோட். செயற்கை நுண்ணறிவு முறையில் வடிவமைக்கப்பட்ட நாய் வடிவிலான ரோபோ பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்ல ஞாபகம் மறதியால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று அதனை உருவாக்கி இருக்கும் ஸ்பெயின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

மொபைல் தொலைபேசியில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டு கூகுள் மேப்பை பயன்படுத்தி செயல்படும் இந்த ரோபோவுக்கு டெபி என்று பெயரிடப்பட்டுள்ளது. வழிகாட்டி ரோபோவின் கண்களை சுற்றிலும் இயந்திரக் கற்றல் அமைப்புடன் இணைக்கப்பட்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது பொருட்களையும், சாலையில் நடக்கும் மனிதர்களையும் வேறுபடுத்தும்.

இந்த ரோபோக்களால் சாலையில் உள்ள சிக்னல்களை கண்டுபிடிக்க முடியும். QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவும் முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ பயனாளரை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலும் கால் டாக்ஸியின் முன்பதிவு செய்ய சொன்னாலும் பணிகளை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரோபோவின் விலை குறைவாக இருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்