உத்தரபிரதேச மாநிலம் டௌராலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரூஹாசா கிராமத்தில், 8 வயது சிறுவனை வெறி நாய் ஒன்று பயங்கரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன் மீது நாய் திடீரென பாய்ந்தது. முகத்தில் கடித்த நாய், சிறுவனின் மேல் உதட்டையே கிழித்ததாக தெரிகிறது.

இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது.

மேலும், சிறுவனின் முகம் சிதைந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. உடனடியாக கிராம மக்கள் அந்த வெறிநாயை தேடி பிடித்து கொன்றனர். காயமடைந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.