தமிழக வெற்றிக் கழகம் பாஜக-வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் சிறுபான்மையின மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஜய் இன்று மறுநாள் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த இஃப்தார் விருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இம்முறை மிகக் கவனமாகத் திட்டமிட்டுத் தனியார் இடத்தில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துகிறார்.

பாஜக மேலிடம் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் தகவல்களால் தவெக-வின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதப்படுவதால், இந்த இஃப்தார் விருந்து ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் பெரிய அளவில் அரசியல் பேச மாட்டார் என்றும், “எந்தச் சிக்கலாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்” எனச் சுருக்கமாக மட்டும் பேசிவிட்டுத் தனது ஆதரவைத் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தவெக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் கூட்டணி செய்திகளை மறுத்துள்ள நிலையில், இந்த இஃப்தார் விருந்து மூலமாகத் தான் எந்தப் பக்கமும் சாயவில்லை என்பதைச் சிறுபான்மை சமூகத்தினருக்கு விஜய் உணர்த்த முயல்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.