
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா தான். ஆனால் இதற்கு பழனிச்சாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை தவிர்த்து பாராட்டு விழா நடத்திக் கொண்டார். அதிமுகவின் மூத்த அதிகாரி செங்கோட்டையன் மீது எனக்கு எந்த ஒரு அதிருப்தியும் கிடையாது. நானும் அவரும் ஜெயலலிதா இருந்தபோது பல தேர்தல்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு தலைவர்கள் உருவாக்கிய விதிமுறைகளை திருத்தம் செய்து பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி வகிக்கின்றார். நான் மட்டுமல்ல டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த நிபந்தனையும் இல்லாமல் தயாராக இருக்கின்றோம். பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம். கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு, இல்லையென்றால் நான் உட்பட அனைவருக்கும் தாழ்வு தான்.
அதிமுக ஒருங்கிணைந்தால் பாஜக உடன் கூட்டணி வைப்பது தான் நல்லது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் போது நாம் பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக ஒருங்கிணைந்து இருந்தால் தற்போது ஆட்சியில் இருந்திருக்கும். தனி கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சிக்கு செல்வது எங்கள் நோக்கம் அல்ல. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர்ந்து போராடி வருகின்றோம். எனவே கட்சியை ஒருங்கிணைப்பது முக்கியம் என ஓபிஎஸ் பேசியுள்ளார்.