அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில்  நிலுவையில் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிப்ரவரி மாதம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிமுக கட்சியின் உட்கட்சி பூசல்கள் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, அதிமுக கட்சியின் இரு தரப்பும் போட்டி போட்டு பாஜகவுக்கு காவடி தூக்குகிறார்கள். பாஜக வளர்வது அதிமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது கிடையாது. இதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் இதற்கு முன்னதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆதரவு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.