
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தொடர்ச்சியான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பகுதியாக, 2023 பிறகு தற்போது கூடுதலாக 9,100 பேரை வேலைவிலக்குச் செய்துள்ளது. அதனுடன் இணையாக, பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டது என்பதும் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து மைக்ரோசாஃப்ட் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், “உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு தொழில்நுட்ப மாறுதல், மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப செயல்பாடுகளை மையமாக்குவது” ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இயங்கி வந்த மைக்ரோசாஃப்ட் அலுவலகம் மூடப்பட்டுள்ள தகவல், அந்நாட்டு தொழில்நுட்ப தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் தனது பணிச்சூழலை நவீனமாக்குவதற்கும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தனது பல கிளைகளில் மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் அலுவலக மூடல் உலகத்திற்க்கே ஒரு எச்சரிக்கையான நிகழ்வாக அமைந்துள்ளது.
இதேநேரத்தில், இந்த ஆட்குறைப்புகள், வேலைவாய்ப்புக்கு எதிரான சவால்களை மட்டுமின்றி, பிராந்திய அடிப்படையில் தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே மதிப்பீடு செய்யப்படுகிறது.