சென்னை மாவட்டம் திருவான்மியூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர், ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன் பவன் கல்யாண் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். தமிழுக்கும் தெலுங்குக்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. தமிழகம், ஆந்திராவும் ஒரே கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை கொண்டது.

அந்நியர்களை எதிர்த்து இரண்டு மாநிலங்களும் சேர்ந்தே போராடி உள்ளது. ஆந்திராவில் என்.டி. ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் இருவருக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அதேபோல புதிய எம்ஜிஆர்-ஆக, புதிய வரவாக பவன் கல்யாண் நம்மோடு பவனி வந்திருக்கிறார்.

அவருடைய வரவு நல்வரவாக வேண்டும் என பேசினார். நயினார் நாகேந்திரன் பவன் கல்யாணை புதிய எம்ஜிஆர் என குறிப்பிட்டதால் அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதே கருத்தரங்கில் பேசிய பவன் கல்யாண் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.