பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கோவை மற்றும் திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை மற்றும் திண்டுக்கல் இடையே ஜனவரி 27 முதல் 29 வரை மூன்று நாட்களும் பிப்ரவரி நான்கு முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிகளில் காலை 9.20 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் காலை 11.43 மணிக்கு பழனி சென்றடையும். பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அதனைப் போலவே மறு மார்க்கத்தில் திண்டுக்கல் மற்றும் கோவை சிறப்பு ரயில் மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கலில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு பழனியை சென்றடையும் எனவும் இந்த சிறப்பு ரயில் கிணத்துக்கடவு, போத்தனூர், பொள்ளாச்சி, மயிலாடி சாலை, உடுமலைப்பேட்டை, புஷ்பத்தூர், பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.