ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. அரசு கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் ஏராளமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. அதன்பிறகு பறவை காய்ச்சல் பரவிய இடத்தில் உள்ள மக்களின் மாதிரிகளும் சேமிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா தற்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது, மாநிலத்தில் தற்போது ஒரு சில இடங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நிலைமை என்னும் மோசமாகவில்லை. கால்நடை வளர்ப்பு துறையுடன் நாங்கள் தொடர்பிலிருந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பறவை காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பறவை காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் அதிக அளவில் கோழிக்கறியை சமைத்து சாப்பிடுவேன். கோழிக்கறியை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் கோழிக்கறியை சமைத்து சாப்பிடுவேன் என்று சொன்னது சர்ச்சையாக மாறியுள்ளது.