பொதுவாகவே திருமணம் மற்றும் பிறந்தநாள் என முக்கிய நாட்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணம், நகை மற்றும் வாகனங்களை பரிசாக வழங்குவது வழக்கம். ஆனால் இந்த பரிசு பொருட்களுக்கு வரி விதிக்கப்படுமா, வருமான வரித்துறை விதிகள் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். பொதுவாகவே பணம், காசோலை, வரையோலை, நிலம், வீடு, கடை, பிளாட் மற்றும் வணிக சொத்து, நாணயங்கள் மற்றும் நகைகள் ஆகியவை பரிசாக வழங்கப்படும்.

வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் ஒரு நிதியாண்டில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிசுகளுக்கு வரி கிடையாது. ஆனால் வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது இந்த அனைத்து பரிசுகளும் பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும். பிறந்தநாள் அல்லது வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பெறப்படும் பரிசுகள் மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானமாக கருதப்படுகின்றது. எனவே பரிசு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அனைத்து பரிசுகளின் விலையும் மொத்தம் மற்றும் வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும்.