மத்திய அரசின் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நான்கு விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வே ராமசாமி நாயக்கர் என சாதிப்பெயருடன் குறிப்பிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்தார். மேலும் சாதி ஒழிப்புக்காக போராடிய ஈ.வே ராமசாமியின் பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அது ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.