
உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷன் ஆகிவிட்டது என்றும் அதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் கூட அடுத்த 7 ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்றும் கூறினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசும்போது அம்பேத்கர் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பு அனைவரும் அறிந்ததுதான். இதன் காரணமாக காங்கிரஸ் என்னுடைய பேச்சை திரித்து கூறுகிறது. நேற்று முதலே காங்கிரஸ் என்னுடைய பேச்சை திரித்து கூறி வருவதை நான் கண்டிகிறேன். அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்புக்கு காங்கிரஸ் கட்சி தான் எதிரானது. பலமுறை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தங்களுக்கு தாங்களே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்ட நிலையில் கடந்த 1970 ஆம் ஆண்டு நேரு தனக்குத்தானே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட நிலையில் அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
தேர்தல் சமயத்தில் என்னுடைய கருத்தை ஏஐ மூலமாக காங்கிரஸ் திரித்து வெளியிட்ட நிலையில் தற்போதும் அதே போன்று திரித்து பேசுகிறார்கள். எப்போதுமே அம்பேத்கரை அவமதிக்காத அரசியல் கட்சியை சேர்ந்தவன் நான். பாஜக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அம்பேத்கர் கொள்கைகளை பிரச்சாரம் செய்துள்ளோம். காங்கிரஸின் இந்த கேவலமான முயற்சியை நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் அழுத்தத்தினால் நீங்களும் இதில் இணைந்துள்ளது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. என்னை கார்கே ராஜினாமா செய்ய சொல்லும் நிலையில் அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமா செய்யக்கூட தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து விடாது. மேலும் இன்னும் அவர் 15 ஆண்டுகளுக்கு அதே இடத்தில் தான் அமர்ந்திருக்க வேண்டும் என்று கூறினார்.