
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்று பொது மக்களை சந்தித்து பேசினார். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த மக்களை நேரில் சென்று சந்தித்த விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமையாது என்றும் சட்டப்படி அனைத்து போராட்டங்களையும் முன்னெடுத்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் மக்களுக்கு உறுதி கொடுத்தார். அதன்பிறகு பரந்தூரில் ஏர்போர்ட்டை தாண்டி ஆளும் கட்சிக்கு வேறு ஏதோ லாபம் இருக்கிறது என்று விஜய் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அதாவது ஜி ஸ்கொயர் நிறுவனம் பரந்தூரில் ஏராளமான இடங்களை வாங்கி குவித்துள்ளதாக சமீப காலமாகவே குற்றசாட்டுகள் இருக்கும் நிலையில் அதனை அந்த நிறுவனம் இதுவரை மறுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று பரந்தூரில் ஏர்போர்ட்டை தாண்டி திமுகவுக்கு வேறு ஏதோ லாபம் இருக்கிறது என்று விஜய் கூறிய நிலையில் தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இது பற்றி அந்த நிறுவனம் கூறியதாவது, எங்கள் நிறுவனத்துக்கு பரந்தூரில் அதிக அளவில் நிலம் இருப்பதாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தங்களுக்கு பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எந்தவிதமான நிலமும் இல்லை. இது தொடர்பாக பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்துக்கு அரசியல் தொடர்புகள் எதுவும் இல்லை எனவும் தேவையில்லாமல் பொய்யான தகவல்களை பரப்பினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி ஸ்கொயர் எச்சரித்துள்ளது.