
சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் தற்போது பாட்டில் நீருக்காக ரூ.10, தேநீர் ரூ.10, காபி ரூ.20, சமோசா ரூ.20, மற்றும் “இன்றைய சிறப்பு இனிப்பு” ரூ.20 என்ற விலையில் வாங்கக்கூடியதாக இருக்கிறது. இது அடிக்கடி பயணிக்கும் நபர்களுக்கும், குறைந்த செலவில் பயணிக்கும் பயணிகளுக்கும் இது ஒரு பெரும் நன்மையாக இருக்கும். தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தரமான, சுகாதாரமான உணவுகளைச் சேர்ப்பதே இந்த “உடான் யாத்ரீ கஃபே” திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தக் கஃபே திட்டம் முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. அங்கு இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், நாட்டின் மற்ற விமான நிலையங்களிலும் அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்துக்குப் பிறகு, டெல்லி விமான நிலையத்திலும் இதே மாதிரியான மலிவான உணவுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டம் நாடு முழுவதும் விமானப் பயணிகளுக்கு மேலும் வசதிகளை வழங்கும் அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக அமைகிறது.