பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீரின் ஓட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான திடமான பதிலடி எனக் கருதப்படுகிறது. பாக்லிஹார் அணையின் கதவுகள் மூடப்பட்டதால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு செல்ல வேண்டிய நீர் ஓட்டம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாக்லிஹார் அணை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய நீர்மின் திட்டமாகும். இந்தியா தனது உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு மின் உற்பத்திக்காக நீரை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கையுடன் இணைந்து, பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X (முன்னாள் ட்விட்டர்) கணக்குகள், மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் நிதியமைச்சர் பிலாவல் பூட்டோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சமூக ஊடக கணக்குகளும் இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.