
சென்னை மாவட்டம் வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் ராஜ். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா(10),தன்ஷிகா(3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜ் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வியாசர்பாடியில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னசேக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார்.
நேற்று முன்தினம் ராஜ் சீட்டு பணம் கட்டுவதற்காக தனது மனைவி மற்றும் இளைய மகள் தன்ஷிகாவுடன் ஆட்டோவில் வியாசர்பாடிக்கு வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் ஆட்டோவை மடக்கி ராஜை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரது தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்குவதற்காக சூர்யா எனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சூர்யா, அவரது நண்பர்களான ராம், அஜித், முருகன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.