
பத்மஸ்ரீ விருதுப் பெற்ற யோகா குருவும் ஆன்மிக தலைவருமான சுவாமி சிவானந்தர் அவர்கள் 128-வது வயதில் நேற்று (சனிக்கிழமை) வாரணாசியில் காலமானார். மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் பிஎச்யு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் இரவு தாமதமாக துர்காகுண்டில் உள்ள கபீர் நகர் ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹரிச்சந்திர காட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக சீடர்கள் தெரிவித்துள்ளனர்.
1896-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி, தற்போது வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் மாவட்டத்தின் ஹரிபூர் கிராமத்தில் பிறந்த சிவானந்தர், சிறு வயதிலேயே ஆன்மிக சாதனை பாதையில் பயணித்தார். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, குளித்த பிறகு வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத்கீதையை ஓதுவதை தன் பழக்கமாக வைத்திருந்தார். தனது வாழ்க்கையில் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டதில்லை. கடந்த, 2019-ல் கொல்கத்தா மற்றும் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டபோது முழுமையாக ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவானந்தர் தினமும் யோகா, பிராணாயாமம், சர்வாங்காசனம் மற்றும் ஷவாசனம் ஆகியவற்றை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். “அவர் வாழ்நாள் முழுவதும் வேகவைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்ட நிலையில் பழங்கள், பால் போன்றவற்றை தவிர்த்தார். தினமும் பார்லி கஞ்சி, உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்த காய்கறிகள் தான் அவரது உணவாக இருந்தது,” என அவர் கூறியதாக சீடர்கள் கூறியுள்ளனர். இரவு 9 மணிக்குள் தூங்குவது அவரது வழக்கமாக இருந்தது.
அதே போல, அவர் மரத் தலையணையுடன் கூடிய பாயில் தூங்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். வாரணாசியின் கபீர்நகரில் உள்ள துர்காகுண்ட் ஆசிரமத்தில், ஒரு பழைய குடியிருப்பில் சில சீடர்களுடன் வாழ்ந்தார். தினமும் இரண்டு முறை 30 படிகள் ஏறி இறங்குவதை தவறாமல் செய்து வந்த அவர், வெப்பத்திலும் குளிரிலும் எளிய வாழ்க்கையை கடைப்பிடித்தார். “ஏசி இல்லாமல் காற்றாடியுடன் தூங்குவார், குளிர்காலத்தில் கூட கம்பளி போட மாட்டார்,” என அவரது சீடர்கள் கூறியுள்ளனர்.
பாபா சிவானந்த் தனது நான்கு வயதில் தனது குடும்பத்தைப் பிரிந்து, ஆறு வயதிலிருந்தே யோகாவை தனது வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாற்றினார். பிரிக்கப்படாத வங்காளத்தின் ஸ்ரீஹட்டா மாவட்டத்தின் ஹரிபூர் கிராமத்தில் ஒரு கோஸ்வாமி பிராமண குடும்பத்தில் பாபா சிவானந்த் 1896 ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தார். பாபா சிவானந்த், பாபா ஓம்காரனந்த் கோஸ்வாமியிடம் தீட்சை பெற்று யோகா கற்றார். யோகா இறுதிவரை அவருடன் இருந்தது, மேலும் அவர் யோகாவை தனது நீண்ட ஆயுளுக்கு அடிப்படையாக விவரித்தார்.
மேலும் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்த நிலையில் விருதை வாங்கும் போது அவர் பிரதமர் மோடியை தரையில் விழுந்து வணங்கினார். உடனடியாக பிரதமர் மோடியும் அவரை தரையில் விழுந்து வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.